உள்ளுராட்சி தேர்தல் என்ற பெயரில் எமது கைகளைக் கொண்டே எமது கண்களை குத்துவதற்கு பல தரப்புக்களும் முயற்சிகள் செய்கின்றன. எமது மக்கள் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கானது இந்த தேர்தலில் மறைமுக நிகழ்ச்சி நிரலைத் தடுக்க உதவும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சாஸ்திரிகூளாங்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
உள்ளூராட்சி தேர்தல் என்பது கிராமத்தில் அவைகளின் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டு அவைகளின் வருமானத்தைக் கொண்டும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளைக் கொண்டும் அந்தந்த கிராம மட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு அபிவிருத்திகளை மேற்கொள்வதாகும். நாளாந்த செயற்பாடுகளாக, கழிவகற்றல் முகாமைத்துவம், பொது சுகாதாரம், வீதிகளை செப்பனிடல் போன்ற நிர்வாக முகாமைத்துவங்களை தடையின்றியும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் மக்களின் சுகாதார வாழ்வை உறுதிப்படுத்துவதையும் மையமாகக் கொண்டவைகளே.
இதற்கு சிறந்த கல்விமான்களாகவோ, தொழில்சார் வல்லுனர்களாகவோ இருப்பவர்கள் மட்டுமே பிரதிநிதிகளாக வர வேண்டும் என்ற அவசியமில்லை. மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கக்கூடிய இது எனது கிராமம் இது எனது வட்டாரம் இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் முக்கியமானது என்று சிச்தித்து வினைத்திறன்மிக்க வகையில் செயலாற்றக் கூடியவாக்கள் எவரும் தகுதியானவர்களே.
நடைபெறவுள்ள தேர்தலைப் பொறுத்தவரை உள்ளூராட்சி சபைகளின் செயற்திட்டங்களுக்கு அப்பால் வேறு ஒரு மறைமுக நிகழ்சி நிரல் இருப்பதை எம்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக எமது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாக கூறி அதற்கென முழு பாராளுமன்றத்தையும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றி அந்த சபையை வழிநடத்துவதற்காக ஒரு வழி நடத்தல் குழுவையும் அமைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு இடைக்கால அறிக்கைக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் ஒப்புதலைப் பெறுவதே அந்த மறைமுக நிகழ்சி நிரலாகும்.
இந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து தரப்பினர் மற்றும் தமிழ்தரப்பில் பங்குபற்றியவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. மேலும் தமிழ் மக்களின் அபிலாiஷகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த அறிக்கை வெளிவரவில்லை என்பதுடன் பெரும்பான்மை தேசிய இனமான சிங்கள தேசிய இனத்தையும் பௌத்த மதத்தையும் திருப்திப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெறிறருந்த அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அவர்களின் அபிலாiஷகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலிருந்து விலகியிருப்பதை காணமுடிகிறது.
இந்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் திரு சம்பந்தன் கூறிய ஒரு விடயத்தை நினைவில்கொள்வது பொருத்தமாக இருக்கும். ‘புதிய அரசியலமைப்பு ஊடாக எட்டப்படுகின்ற அரசியல் தீர்வானது நாட்டில் சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
அவரது கூற்றுக்கு அமைவாக இந்த இடைக்கால அறிக்கை அமைந்திருப்பதை எமது மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் யாழ் பல்கலைக்கழக சமூகம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த இடைக்கால அறிக்கையை ஏற்க முடியாதென அறிவித்திருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆகவே இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பது கிராமங்களுக்கான அபிவிருத்தி என்ற போர்வையில் கபடத்தனமான ஒரு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிலும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான செயற்திட்டத்திற்கு எம்மிடமே ஆணைகோரும் செயல் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது எமது கைகளைக் கொண்டே எமது கண்களை குத்தி குருடாக்கிக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாம் அவதானமாகவும நிதானமாகவும் எமது எதிர்கால சந்ததிகளின் நலன் கருதியும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. இனவிடுதலைக்கான போராட்டம் வடக்குக் கிழக்கில் உக்கிரம் பெற்றிருந்த வேளைகளில் அதனை ஏளனம் செய்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிட்டு மேற்கொள்கின்ற நிகழ்ச்சி நிரலுக்காக வாக்கு கேட்டு களமிறங்கியுள்ளனர்.
எமது மக்கள் சொந்த பந்தங்களையும், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்ற எண்ணங்களை ஒருபுரம் ஒதுக்கிவைத்து விட்டு எமது எதிர்கால சந்ததியின் நலன் கருதி தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. அரசியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதற்காகவே நாம் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.
வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் திரு வேலுப்பிள்ளை சிவபாதசுந்தரம் (சுந்தரம்) என்பவரையும் ஈச்சன்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான திரு ஆறுமுகம் அருளானந்தம் (அருள்) மற்றும் திருமதி மாதவராசா சிவபாக்கியம் ஆகியோரை ஆதரித்து புதுக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான திரு தியாகராசா மற்றும் திரு இந்திரராசா ஆகியோரும் ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான திரு எஸ்.பி. செந்தில்நாதனும் இந்த கிராமத்தில் இயங்கும் ஒன்பது பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.