பொருளாதார ரீதியாக பின்னடைவு கண்டுள்ள யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க தம்மாலான உதவிகளை மேற்கொள்ள முடியும் என, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனெடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ் பெரிய ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரியிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கருத்து தெரிவித்த ஹரி, மக்களுடைய இன ரீதியான ஐக்கியம் கட்டியெழுப்ப முடியாத சூழல் காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலை தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட அனுமதிக்கக் கூடாது. அதற்கான புதிய வழிகளை கொண்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வை பெற் கூடியதாக அமையும். அந்த வகையில் இவ்வாறான தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு சகல வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னேடுக்க தாம் தயார் என தெரிவித்துள்ளார்.