அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நீதிமன்ற தடையை மீறி இன்றும் 3ஆவது நாளாக பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரச பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகள் திடீரென்று ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்து கிடைக்காமல் பலர் முச்சக்கர வண்டியில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகளிலும், முச்சக்கர வண்டிகளிலும் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க ஆரம்பித்தனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால், பணிக்கு செல்வோர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.