இந்தியாவில் பாடசாலைப் கல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையில் 46.9 சதவிகிதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடந்த வெள்ளிக்கிழமை உயர்கல்வி தொடர்பான புள்ளிவிபர பட்டியலை வெளியிட்டார். அதில், பாடசாலைக் கல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை இந்திய அளவில், 46.9 சதவிகிதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த சராசரியே 25.2 சதவிகிதம் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகம் தொடர்ந்து நான்காண்டுகளாக முதலிடத்தில் உள்ளது
பீகார், அசாம், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்கள் முறையே, 14.4 %, 17.2 %, 18.5, 21 % சதவிகிதங்களுடன் பட்டியலில் கடைசி இடங்கள் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை சண்டிகர் 56.1 சதவிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்கல்வி கற்பதிலும், பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி கற்பதிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.