குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மை ஓய்வு பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என தென் ஆபிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், சிம்பாப்வே அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளருமான மக்காயா நிட்னி (Makhaya Ntini ) தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பயிற்றுவிப்பாளர் பதவியை தாம் ராஜினாமா செய்யவில்லை எனவும் ஆழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்கள் நிட்னியின் பயிற்றுவிப்பு முறைமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும், உலகக் கிண்ண போட்டிக்கான பயிற்சி முகாம்கள் ஆரம்பமாக முன்னதாக நிட்னி, பணியிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்திருந்ததாக அண்மையில் தென் ஆபிரிக்க வானொலி ஒன்றுக்கு நிட்னி தெரிவித்திருந்தார்.
தமது பணி குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறு எவரும் தம்மிடம் நேரில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விருப்பமின்றி நிட்னியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக சிம்பாப்வே கிரிக்கட் நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது