குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆளுநர் செயலகத்தின் புதுவருடத்தின் பணிகளை சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கும் நிகழ்வு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (08) காலை இடம்பெற்றது.
ஆளுநர் றெயினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கேஸ்வரன், எதிர்கட்சி தலைவர் தவராசா, அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஆனந்தி சசிதரன், சிவனேசன், குணசீலன் ஆகியோர் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்றுக்கொண்ட 9 மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர் வட மாகாணசபை எஞ்சியிருக்கின்ற காலத்தினை மத்திய அரசுடன் இணைந்து, பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு உதவிபுரிய முயலவேண்டும் என இந்த புதிய ஆண்டு ஆரம்பத்தில் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
மக்களுக்கு உதவி புரிய வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் வழங்குவதற்;கு தயாராக இருப்பதாகவும் வட மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய அனைத்தினையும் மாகாணசபை செய்யுமானால் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்தார்.
சிந்தித்து செயற்படுவதற்கான காலம் பிறந்துள்ளதாகவும் அதனால் அனைத்து தலைவர்களும் சிந்தித்து செயற்பட்டு மக்களுக்கு தமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.