போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது
தமிழகத்தில் நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடிவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ளது. இந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்துக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மாநிலம் முழுவதும் 60 சதவீதத்துக்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் பல இடங்களில் தனியார் பேருந்துகளே பெரும்பாலும் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாடசாலை கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கியதால் பொதுமக்களும், மாணவர்களும் பேருந்துகள் கிடைக்காமல் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே பேருந்துகள் இயங்கியதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்ததநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 250 பேரும் திருவாரூர் மாவட்டத்தில் 240 பேரும் கரூரில் 21 பேரும் மதுரையில் 60 பேரும் நாமக்கல்லில் 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது நாளாக தொடரும் தமிழக பேருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்… அவதிப்படும் மக்கள்…
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் 6-வது நாளாக தொடரும் நிலையில், சுமூக தீர்வு ஏற்பட்டு இயல்பு நிலை திரும்புமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை ஆரத்பித்து இருந்தனர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெரும்பாலான அரச பேருந்து ஓட்டனர்கள், நடத்துனர்கள், பணிக்கு செல்லாததால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 6-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், முறையாக கடிதம் அனுப்பப்பட்ட பின்னர்தான் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கத்தின் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்றைக்குள் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் விஜய பாஸ்கர் கெடு விதித்துள்ளார்.
அரசும் – தொழிற்சங்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.