இந்தியாவில் கொள்ளை போன 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாவின் சிலை 16 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனிலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ரானி – கி – வாவ் தளத்தில் இருந்த 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மா சிலை 2001-ம் ஆண்டு கொள்ளை போனது. கொள்ளையர்கள் இந்த சிலையை வெளிநாட்டிற்கு கடத்திச் சென்றனர்.
இந்த சிலை லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள சிலையை மீட்க அதிகாரிகள் மேற்கொண்ட கடின முயற்சிகளின் பயனாக, 10 ஆண்டுகள் பின்னர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்சமயம் சிலை பூரானா குய்லா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விலைமதிப்பற்ற இந்த சிலை விரைவில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லண்டனுக்கு கடத்தப்பட்ட 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜரின் சிலையை மீட்க 20 ஆண்டுகளாக அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் அந்த சிலை மீட்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கோவில்களிலிருந்து ஆயிரக்கணக்கான பழமையாக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும். சிலை கடத்துபவர்களுக்கு எதிராக இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.