குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போன விமானத்தை கண்டு பிடித்துக் கொடுத்தால் 70 மில்லியன் டொலர் வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது. மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தை 90 நாட்களுக்குள் தேடிக் கண்டு பிடித்தால், அமெரிக்க நிறுவனமொன்றுக்கு 70 மில்லியன் டொலர்களை வழங்குவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் இந்த எம்.எச்.370 ரக விமானம் காணாமல் போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் 200 மில்லியன் டொலர்களை செலவிட்டு 1,20,000 சதுர கிலோ மீற்றர் பகுதியில் நடத்திய தேடுதல்கள் வெற்றியளிக்கவில்லை. அமெரிக்காவின் ஹொஸ்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று விமானத்தை தேடும் பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
விமானத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் மட்டுமே 70 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 17ம் திகதி முதல் 90 நாட்களுக்கு தேடுதல் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.