குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் கடந்த 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் 16 இராணுவத்தினருக்கும் பிணை வழங்கியது. அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபரால் 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஏனைய 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 9 இராணுவத்தினர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனைய 5 இராணுவத்தினருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் பிணை வழங்கியது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் 5 பேரும் மன்றில் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கை முன்னெடுப்பதற்கு மன்னார் மாவட்ட அரச சட்டவாதி சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார். அதனால் வேறொரு அரச சட்டவாதியை விரைவில் நியமிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது.
எனவே வழக்கு விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அச்சுவேலி காவல்துறையினர் மன்றில் விண்ணப்பம் செய்தனர். காவல்துறையினரின் விண்ணப்பத்தையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை ஒத்தி வைக்கபப்ட்டது.