இந்தியா வேண்டாம்.. சீனாவே வேண்டும் என்கிறது நேப்பால்..!
இந்திய நிறுவனங்களுடன் இருந்து நீண்ட காலமாகப் பெற்றுவந்த, இணையதளச் சேவையில் இருந்து வெளியேறிய நேப்பால் அரசு, சீனாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நேப்பால் அரசு நிறுவனமான நேப்பால் ரெலிக்கொம் நிறுவனம், சீன ரெலிகொம் குளோபல் உடன் இணைந்து இணையதளச் சேவை வழங்க பான்ட்வித்தை (bandwidth) பெற்று வெள்ளிக்கிழமை முதல் இந்திய சேவைகளிடம் இருந்து வெளியேறியுள்ளது.
இந்திய நிறுவனங்களுக்கு மாற்றாகப் பெறப்படும் இந்தச் சீன சேவையின் மூலமாகத் தடையில்லா இணையதளச் சேவையினை அளிக்க முடியும் என நேப்பால் ரெலிகொம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய ரெலிகொம் நிறுவனங்களான ஏர்ரெல் மற்றும் டாடா கொம்யுனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து நேப்பால் ரெலிகொம் நிறுவனம் இமாலய பகுதிகளில் இணையதளச் சேவையினை வழங்கி வருகிறது.
இந்தியாவிடம் இருந்து பெற்று வந்த இணையதளச் சேவையானது மிக மோசமாக இருந்ததாகவும், அடிக்கடி சேவை துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் இதுவே அவர்கள் சீனாவுடன் கைகோர்த்ததற்கான காரணம் எனவும் நேபால் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நேபால் அரசின் இந்த முடிவு, இந்தியாவிற்கு ஏற்படும் வருமான இழப்பு மட்டும் அல்லாமல் அயல் நாடுகளிற்கு இடையில் இருந்த நட்புறவிலும், இழப்பு ஏற்பட்டுள்ளதற்கான ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அன்மையில் உலகளவில் நடைபெற்ற இணைய வேகம் குறித்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவில் இந்தியாவின் இணைய வேகமானது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது
எனினும் இணையதளச் சேவை வழங்குநர்கள் தாம் பெறும் தொகையினை விட, மிகக் குறைந்த கட்டணத்திற்கான சேவையினையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.