ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவடைய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்ததன் பின்னரே உயர் நீதிமன்றம் தனது இரகசிய முடிவை ஜனாதிபதிடம் தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது – 2020ல் ஜனாதிபதி தேர்தல்?
19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்துள்ளதாக கொழும்பில் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனினும், 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தது.
இந்த விடயம் கடுமையான விவாதங்களைத் தோற்றுவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றமானது தனது நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேவேளை ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்க ஏற்கனவே இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு இடையீட்டு மனுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் தலைமையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.