பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் பெருவின் தென்கிழக்கு பசிபிக் கடற்கரையில் அகாரி என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது
இந்த நில நடுக்கம் காரணமாக ஆர்கொஸ்பா, ஐகா மற்றும் அயாகுஜோ மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் பாறைகள் உருண்டு விழுந்தமையால் இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதனால் பல வீடுகள் இடிந்துள்ளதாகவும் வீதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகர் பகுதியில் இருந்து கிராம புறங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை 65 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட மிக அதிக உயரத்துக்கு எழும்பியதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.