கைதிகளிடையே கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவி பொருத்துவதற்கான அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும், குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கமராக்களை பொருத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையானவர்கள் நலம்குறித்த வழக்கில் கைத்தொலைபேசிகள் இலகுவாக சிறைச்சாலைகளில் கிடைக்கிறது எனவும் , அதன்மூலம்தான் குற்றச்சம்பவங்களுக்கான திட்டங்களை உள்ளிருந்தே கைதிகள் தீட்டுவதாக செய்திகள் வெளியாவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே சிறைக்குள் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டை தடுக்க ஜாமர்கள் பொருத்துவது அவசியம் எனவும் இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் , சிறுகுற்றங்கள் செய்த கைதிகள் மற்றும் முதன்முறை குற்றம்புரிந்த கைதிகளையும் பாரிய குற்றம் புரிந்த குற்றவாளிகளுடன் தங்கவைக்கக்கூடாது எனவும், இதுதொடர்பாக அரசிடம் ஏதும் செயல்திட்டம் உள்ளதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் சிறையில் முக்கிய இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் அதிக திறன் கொண்ட கமராக்களை நிறுவுவதன் மூலம் தேவையில்லாக விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம் என்பதால், சிசிடிவி கமராக்களை நிறுவுமாறும் சிறைத்துறைக்கு ; உத்தரவிட்டுள்ளனர்.