குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வலி.தெற்கு பிரதேசசபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கூட்டத்தையும் குழப்பியுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது.
ஈவினைதெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று 15.01.2018 திங்கட்கிழமை பி.ப 04 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் வட்டார தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக்கூட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது. மேற்படி கூட்டத்தில் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ரதி ஆகியோரும் அவர்களது ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென் மண்டபத்துக்குள் நுழைந்த வேறு கட்சி வேட்பாளர் கூட்டத்தை குழப்பும் வகையில் அடாவடித்தனம் புரிந்ததுடன், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் குறித்த மண்டபத்தை விட்டுவெளியேறுமாறும் சத்தமிட்டு குழப்பம் விளைவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக மண்டபத்தை விட்டு வெளியேறிய மக்களும் பிரமுகர்களும் மண்டபத்துக்கு முன்னாலுள்ள வீதியில் நின்றபடி தொடர்ந்தும் கூட்டத்தினை நடாத்தியுள்ளனர். இதன்போது குறித்த வேட்பாளர் தன்னுடைய மோட்டார்சைக்கிளுடன் நடுவீதியில் நின்றபடி கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.