”பெண்கள் நாதஸ்வர கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண் கலைஞர்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது. பெண் நாதஸ்வர கலைஞர்களுக்கு அதிக மதிப்பும் சமூகத்தில் உள்ளது. திருமண நிகழ்வுகளில் பெண் நாதஸ்வர கலைஞர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், என் வீட்டார் நான் தொழில்முறைக் கலைஞராக வளர்வதற்கு உதவுகின்றனர்,” என்றார் ரேகா (19).
ரேகாவின் தந்தை தனபால் நாதஸ்வர கலைஞராகவும், தாத்தா மாரியப்பன் தவில் கலைஞராக இருந்துள்ளனர். இருவரின் கலைஞானமும் தனக்கு கைகொடுக்கும் என்று உறுதியோடு இருப்பதாகக் கூறுகிறார் ரேகா.
பரம்பரை பரம்பரையாக நாதஸ்வர இசைக் கலைஞர்களைக் கொண்ட குடும்பங்களில் இருக்கும் பெண்களுக்குக் கூட, இசை வித்வான்களாக உருவெடுக்க கிடைக்காத வாய்ப்பை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள தமிழக அரசு இசைக்கல்லூரியில் படித்துவரும் மாணவிகளில் ஒருவர்தான் ரேகா.
நாதஸ்வர வாத்தியத்தைக் கற்க திருவையாறு இசைக்கல்லூரியில் சேர்ந்துள்ள நான்கு மாணவிகளும், அவர்களின் குடும்பங்களில் முதல் தலைமுறையாக இசை கற்கும் பெண்மணிகளாக உள்ளனர்.
”எங்கள் பரம்பரையில் தாத்தாவின் தந்தை முதலாக ஆண்கள் மட்டுமே இசைக் கருவிகளைக் கற்று வந்தனர். இதுவரை எந்தப் பெண்மணியும் வாத்திய கருவிகளை கற்றுக் கொள்ளவில்லை. எங்கள் பரம்பரையில் நாதஸ்வரத்தை கற்கும் முதல் பெண் நான்,” என பெருமையோடு சொல்கிறார் இன்னொரு வைஷ்ணவி (19).
”என் அண்ணன் விஜயராகவனை விட எனக்கு இசையில் ஆர்வம் என்பதால், நான் இசைத்துறையில் ஈடுபட என் வீட்டார் ஒப்புக்கொண்டனர்,” என்றார் வைஷ்ணவி.
மாணவிகள் மூன்று ஆண்டுகால நாதஸ்வரம் இசையைக் கற்ற பின்னரும், தங்களது திறனை வளர்த்துக்கொள்ளவும், சந்தேகங்களை தீர்க்கவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் நாதஸ்வர ஆசிரியர் கல்யாணபுரம் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
தொழில்முறை கலைஞராக விருப்பம்
இசை ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா(17) நாதஸ்வரம் கற்றுக்கொள்ள திருவையாற்றில் உள்ள கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
”என் தாத்தா கணேச பிள்ளை கலைமாமணி விருதுபெற்ற நாதஸ்வர கலைஞர். என் தந்தை சோமாஸ்கந்தன் தவில் வித்துவான். இதுவரை என் குடும்பத்தில் பெண்கள் இசைக்கலைஞராக இருக்க அனுமதிக்கப்படவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் அதிக சிரத்தையுடன் கற்று என் திறமையால் உயர்வேன்,” என்கிறார் இரண்டாம் ஆண்டு நாதஸ்வர மாணவி கார்த்திகா.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிச்செல்வியின்(16) தந்தையும் தாத்தாவும் தவில் வித்துவான்களாக இருந்தாலும், அவருக்கு நாதஸ்வரம் கற்கவே விருப்பம். என்பதால் அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறுகிறார்.
”எங்கள் குடும்பத்தில் யாரும் நாதஸ்வரம் வாசித்ததில்லை. தொழில்முறை நாதஸ்வர கலைஞராக நான் உருவாகவேண்டும் என்று ஆர்வம். என் தந்தையுடன் கச்சேரிகளுக்கு சென்று வாசிக்கவேண்டும் என்றும் விருப்பம். முறைப்படி கற்றுக்கொள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்துள்ளேன். நான் நாதஸ்வரத்தை பல பெண்களுக்கு கற்றுத் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் கனிச்செல்வி.
மாணவிகளுக்குச் சிறப்பு கவனம்
பல குடும்பங்களில் குரு-சிஷ்யா முறையில் இசையைக் கற்றுக்கொள்வதில் பெண்களுக்கு இருந்த சாத்தியமற்ற சுழலுக்கு மாற்றாக அரசு இசைக்கல்லூரி இருப்பதாகக் கல்லூரியின் முதல்வர் உமா மகேசுவரி தெரிவித்தார்.
”அரசுக் கல்லூரியில் இசையைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது என்ற விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கலையை கற்கவும், அவர்களின் வாழ்க்கையை நடத்த இசையே அவர்களின் வாழ்வாதாரமாக மாறுவதற்கும் அரசு வாய்ப்பைத் தருவதோடு, உதவித்தொகையையும் வழங்குகிறது,” என்றார் உமா மகேசுவரி.
கிராமப்புற மாணவிகளுக்கு வாய்ப்பு
கலைப்பண்பாட்டுத் துறையின் ஆணையர் ராமலிங்கம், கிராமப்புற மாணவிகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்படவேண்டும் என்றும் முதல் தலைமுறை பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டுவதாக கூறினார் முதல்வர் உமா மகேசுவரி.
”தொழில்முறை கலைஞர்களாக பெண்கள் வரவேண்டும் என்பதற்காக இசை ஆளுமைகளை வரவழைத்து அறிமுகம் செய்கிறோம். அவர்களின் படிப்பு முடிந்தாலும், அவர்கள் விரும்பும்போது வந்து தங்கி, அவர்களின் திறன்களை செழுமைப்படுத்தவும் வாய்ப்புகள் கொடுக்கிறோம்,” என்றார் உமாமகேசுவரி.
(