குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழரசு கட்சி அச்சம் கொண்டு எம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்வாங்க முயற்சித்தார்கள் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜ பெருமாள் தெரிவித்தார். தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்தனர். அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினர் இணைந்து இருந்த வேளை எம்மை கூட்டமைப்பினுள் உள்வாங்க கூடாது என சுரேஷ் பிரேமசந்திரன் செயற்பட்டார் என எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வடமாகாண முதலாமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததனை பார்த்து தமிழரசு கட்சியினர் அச்சம் கொண்டனர்.
அவ்வேளையில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்கனவே வெளியில் நின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முதலமைச்சருடன் இணைந்து புதிய கூட்டு அமைக்க முற்பட்ட போது தமிழரசு கட்சி அச்சத்தில் இருந்தது.
அந்த நேரத்தில் எம்மையும் கூட்டமைப்பில் வந்து இணையுமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , தமிழரசு கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரிடமிருந்து அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன.
பின்னர் சுரேஷ் பிரேமசந்திரன் , கஜேந்திரகுமார் , மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் இணையாமல் தனித்தனியாக நின்றதால் தமிழரசு கட்சியின் அச்சம் நீங்கியது. அதன் பின்னர் எம்மை இணைப்பது தொடர்பிலான பேச்சுக்களை நிறுத்திக்கொண்டு விட்டனர் என மேலும் தெரிவித்தார்.