குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையிலிருந்த ஆவணங்களையும் வீசி எறிந்து விட்டு கடும் கோபத்துடன் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையாக ஆத்திரமுற்ற ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் மிகவும் கோபத்துடன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட ரீதியில் தம்மை தாக்கியும் விமர்சனம் செய்தும் சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் செய்து வரும் பிரச்சாரங்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் போன்றவர்கள் தம்மை மிகவும் இழிவாக பேசி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களையும் ஜனாதிபதி திருடன் கொள்ளைக்காரன் என பகிரங்கமாக கூறுவதாகவும் இவ்வாறான விமர்சனங்களை நிதானமாக வெளியிட வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து கோபமுற்ற ஜனாதிபதி கையில் இருந்த அமைச்சரவை பத்திரங்களையும் வீசி எறிந்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் ஜனாதிபதியை மீளவும் சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமைச்சரவைக் கூட்டத்தை மீளவும் சுமூகமாக நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.