குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
அதனால் வயோதிபரின் விளக்கமறியலை எதிர்வரும் ஐனவரி 30ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகத மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரது கைகளில் வெட்டுக்கத்தி மற்றும் பொல்லு என்பன இருந்தன.
கலையகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த அவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியைத் தாக்கினார். தயா மாஸ்டரை அவர் கத்தியால் வெட்ட முற்பட்ட போது சக பணியாளர்கள் அவரைக் காப்பாற்றினர். அடாவடியில் ஈடுபட்ட முதியவரைத் துரத்திப் பிடித்த டான் நிறுவனப் பணியாளர்கள், அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முதியவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்று செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முதியவர் மனநிலை பாதிகப்பட்டவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்தது. அதனையடுத்து சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்பில் அவர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் கடந்த 10ஆம் திகதி சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. முதியவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை மன்றில் முற்படுத்த முடியவில்லை என யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றுக்கு அறிக்கை முன்வைத்தார்.
இதனையடுத்து சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து நீதிமன்று உத்தரவிட்டது.