இலங்கை பிரதான செய்திகள்

முறைப்பாட்டாளரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கண்டறிவேன். – கு. குருபரன்.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு தடை ஏற்படுத்த முயன்றவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக அறிந்து கொள்ளவுள்ளதாக யாழ்.பல்கலைகழக சட்டத்துறை தலைவரும் விரிவுரையாளருமான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா. வேதநாயகன் குறித்த கருத்தரங்கு ‘அரசியல் கலப்பற்றதாக நடத்தப்படுவதனை உறுதிப்படுத்துவது தங்களின் கடமையாகும். ‘ என கடிதம் மூலம் யாழ். மாவட்ட கூட்டுறவு சபை செயலாளரிடம் கோரி இருந்தார். செயலாளர் உறுதிப்படுத்திய பின்னரே கலந்துரையாடல் நடைபெற்றது.

அதற்கு முன்னர் யாழ்.பல்கலைகழகத்தில் நடைபெற விருந்த குறித்த கலந்துரையாடல் தடை விதிகப்பட்டதன் காரணமாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.

அது தொடர்பில் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில் ,

விசித்திரமான கடிதங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து எமக்கு கிடைக்க பெற்று உள்ளன. அது எம் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனை ஏன் தடுக்க முயல்கின்றார்கள். இது தமிழர் அரசியல் போக்கில் சரியான பாதையல்ல.

இந்த முறைப்பாட்டை செய்து இதனை தடுக்க முயன்றவர் யார் என்பதனை ஊகிக்க நான் முயலவில்லை. ஊகங்களை விட அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அந்த முறைப்பாட்டாளர் யார் என்பதை அறிய இருக்கிறேன். என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.