தீவிரவாதிகள் நவீன அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்று வரும் ராய்சினா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்குள் நுழையும் தீவிரவாதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் வைத்துள்ளனர் எனவும் தீவிரவாதிகள் அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது மனித குலத்திற்கு பேரழிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் சர்வதேச எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள ராணுவ தளபதி தீவிரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முதலில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் நாடுகளை அடையாளம் காண வேண்டும் எனவும் தீவிரவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் எளிதாக தகவல்களை பறிமாற்றம் செய்வதனால் இணையங்களில் சில கட்டுப்பாடுகள் வைப்பதன் மூலம் தீவிரவாத அமைப்புகள் இணையங்களை பயன்படுத்துவதை தடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மக்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற போதிலும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு இது போன்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.