டெல்லி மருத்துவமனை கழிவறையில் சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சரத்பிரபுவுடன் தங்கியிருந்த மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவம் கற்று வந்த நிலையில் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிளஸ் 2வில் 1187 மதிப்பெண்கள் பெற்ற சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் பயின்றதன் பின்னர் கேரளாவின் திருச்சூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த வந்த அவர் இன்று காலை மர்மமான முறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கையில் ஊசி போட்டுக்கொண்டு மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ள போதும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளை சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எந்த கெட்டபழக்கமும் இல்லாத தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என சரத்பிரபுவின் தந்தை செல்வமணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.