சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ. பி. கணேகலவை தடுத்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அகற்றுவதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடாளாவிய ரீதியில் தொடர் பணிப் பகிஸ்கரிப்பு….
Jan 18, 2018 @ 04:33
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடாளாவிய ரீதியில் தொடர் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 09.00 மணி முதல் தொடர் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மின்சார சபை ஊழியர்கள் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தராமல் காவல்துறையினர்; நடத்திய இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ. பி. கணேகலவை தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து அங்கு பதற்றநிலை தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.