முன்னாள் சட்டமா அதிபரும் முன்னாள் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ. நாவஸ் மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ. பெர்டினன்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த மூவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
மொஹான் பீரிஸ், சட்டமா அதிபராக கடமையாற்றிய காலத்தில், லெகோ நிறுவனத்தின் காணி மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்த விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தவறான அறிக்கை ஒன்றை வழங்கியமைக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.