குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பனை தெனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரால் தனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு (OIB 265/155) பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தினால் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. நாளாந்தம் சந்தை மற்றும் இதர தேவைகளுக்கு குறித்த பகுதி பொது மக்கள் அதிகளவு வந்து செல்கின்ற இடமாக காணப்படுவதனால் அங்கு வருகின்ற பொது மக்களுக்கு கள் விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் பாவனையாளர்களால் பெரும் அளெகரியங்கள் ஏற்படுகிறது .
இவற்றினை சுட்டிக்காட்டி குறித்த கள் விற்பனை நிலையத்தினை அங்கிருந்து அகற்றி பிரிதொரு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் உட்பட பல பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பொது மக்கள் ஒப்பம் இட்டு அரசியல் வாதிகள் அரச அதிபர் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பிலேயே கிளிநொச்சி பனை தென்னை வள அபிவருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மதனரூபன் இரணைமடுச் சந்தியில் வைத்து தனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தாக பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.