குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒரு பகுதி மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ஆணைக்குழுவினால் சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது எனவும், அதனைத் தவிர, மேலும் பல பக்கங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது அம்பலமாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நூற்றுக்கணக்கான பக்கங்கள் அல்ல, ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான பக்கங்களை பகிரங்கப்படுத்தாமல் இந்த பிணை முறிகள் மோசடியுடன் தொடர்புபட்ட உண்மையான நபர்களை மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.