பெங்களுரில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் அதிக அளவில் இரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக அங்குள்ள நீர்ப்பகுதியில் நேற்று மீண்டும் தீப்பிடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
பெங்களூரின் தென்கிழக்கு பகுதியான பெல்லந்தூரில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பெங்களூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான இரசாயனக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு இரசாயனக் கழிவுகள் கலப்பதால், அந்த ஏரியில் கடந்த ஆண்டும் தீப்பிடித்திருந்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், பெல்லந்தூர் ஏரியில் நேற்றை தினமும் திடீரென தீப்பிடித்துள்ளது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் ஏரியின் நடுப்பகுதியில் தீப்பிடித்துள்ளதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்கின்ற நிலையில் அதிக அளவிலான இரசாயனக் கலப்பு காரணமாக மீத்தேன் வெடிப்பு ஏற்பட்டு ஏரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று சுற்றுப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.