நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு மரபுகள் குறித்து அவ்வளவாகத் தெரியாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் உலக தலைவர்களை கட்டி அணைத்து வரவேற்பதையும் உரையாடுவதையும் எதிர்கட்சிகள் கிண்டல் செய்வது குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கட்டிப்பிடி ராஜதந்திரம் பலிக்கவில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்த நிலையில் ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்தியப் பிரதமர் அளித்துள்ள போட்டியிலேயே இவ்வாறு கூறினார்.
பிறரைப் போல நான் பயிற்சி பெற்றிருந்தால், நானும் உலக தலைவர்களை சந்திக்கும் போது கை குலுக்கி வரவேற்பு செய்துவிட்டு நின்றிருப்பேன். உலகத் தலைவர்களை நான் கட்டித் தழுவி வரவேற்கிறேன். இதை அவர்களும் ரசித்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டுத் தொடர்புகளும் அதிகரித்து வருகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதகமாக இருக்கும் சூழலை எப்படி வாய்ப்பாக மாற்றுவது என்பது அடிப்படை இயல்புகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன், எனது நாட்டுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே நான் முயற்சிக்கிறேன். எனது உடலின் ஒவ்வொரு அணுவும் நமது நாட்டுக்கு கடன்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காகவே எனது உடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் கண்களில் திருப்தியை நான் காணும்போது என்னுள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது என்றும் கூறினார்.
நான் பிரதமரானபோது, எனக்கு குஜராத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று சிலர் விமர்சனம் செய்தனர். வெளியுறவுக் கொள்கைகளை அவர் எப்படி கையாளப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். விமர்சனங்களை தாங்கி, பாதகமான வாய்ப்புகளை சாதகமாக்கினேன் என்றும் தெரிவித்தார்.
ஆட்சியின் மீது மக்கள் விமர்சனங்களை வைக்கும் போது அதை குறையாக நான் கருத வில்லை. மக்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து குறைகளை உணர்ந்து அவற்றில் இருந்து நம்மை நாம் உயர்த்திக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறு தனது பேட்டியில் மோடி தெரிவித்தார்.