அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு ரோஜர் பெடரர், பெர்டிச் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் நோவக் ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் . நேற்றும் இன்றும் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் இடம்பெற்றன. இந்தவகையில் நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் குரோசியாவின் சிலிச் பிரித்தானியாவின் எட்மண்ட் பல்கேரியாவின் டிமிட்ரோவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
அதேவேளை இன்று நடைபெற்ற நான்கு போட்டிகளில் செர்பியாவின் ஜோகோவிச் கொரியாவின் ஹியியோன் சங்கை எதிர்கொண்ட நிலையில் 3-0 என நேர்செட் கணக்கில் சங் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒரியாவின் டொமினிக் தியம் அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரென்-ஐ எதிர்கொண்ட நிலையில் தியம் 2-3 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
3-வது ஆட்டத்தில் ரோஜர் பெடரர் ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்ஸ்-ஐ எதிர்கொண்டதில் ரோஜர் பெடரர் 6-4, 7(7) – 6(3), 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
கடைசி ஆட்டத்தில் செக் குடியரசின் தோமஸ் பெர்டிச், இத்தாலியின் பேபியோ போக்னினியை எதிர்கொண்டதில் பெர்டிச் 6-1, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவ் – எட்மண்ட், ரபெல் நடால் – சிலிக் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை நாளை மறுநாள் ரோஜர் பெடரர் – பெர்டிச், டெனிஸ் சான்ட்கிரென் – சங் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.