குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஏமனுக்கு 1.5 பில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவியாக வழங்கப்பட உள்ளது. சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளைச் சேர்ந்த நாடுகளே இவ்வாறு நிதி உதவி வழங்க உள்ளன. ஏமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் அந்நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஏமனின் மொத்த சனத்தொகையான 22.2 மில்லியன் மக்களில் மூன்றில் இரண்டு தொகுதியினர் அவசர மனிதாபிமான உதவிகளை நாடி நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏமனில் கொலரா நோயினால் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கப் படையினருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இதுவரையில் 9245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையிலேயே சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளைச் சேர்ந்த நாடுகள் இவ்வாறு நிதி உதவி வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.