குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சிறைச்சாலை காவலர்கள் நால்வருக்கும் ஐம்பதாயிரம் பெறுமதியான சரீர பிணை . இன்று(25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்த குறித்த நான்கு சிறைச்சாலை அதிகாரிகளும் இன்று(25) கிளிநாச்சி நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரினால் முற்படுத்தப்பட்ட போது குறித்த நால்வரிற்கும் தலா ஐம்பதாயிரம் பெறுமதியான பிணை வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் 07-02 -2018 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 23 ம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான்.
குறித்த விபத்துக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.
இதன் பிரகாரம் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ் சிறைச்சாலை காவலர்கள் நால்வர் இன்று(25) கிளிநொச்சி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தாக்கப்பட்டதனை நேரில் கண்ட சாட்சியாக கிளிநொச்சி சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரது வாக்கு மூலமும் கிளிநொச்சி காவல்துiறினரால் கோரப்பட்டுள்ளதுடன் அவரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளியும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சியில் சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள்…
Jan 23, 2018 @ 13:50
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில் கரடிப்போக்கு சந்தியில் இன்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கின்றார்.
குறித்த மனிதாபிமானம் இன்றிய சிறைக்காவலர்களின் செயற்ப்பாடு அனைவரது மனங்களையும் காயப்படுத்தி விட்டதாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்