உங்களுடைய முந்தைய படங்களிலிருந்து சவரக்கத்தி எப்படி வேறுபட்ட படம்?
இதற்கு முன்பாக படங்களை இயக்கி, அதில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தை என்னுடைய அசிஸ்டெண்டும் சகோதரனுமான ஜி.ஆர். ஆதித்யா இயக்கியிருக்கிறான். அதேபோல, ஒரு திரைக்கதை ஆசிரியராக, நகைச்சுவை என்ற அம்சத்தைத் தொட்டதில்லை. ஆனால், இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை சார்ந்தது. படத்தின் முக்கிய இரு பாத்திரங்களுமே நகைச்சுவையோடுதான் உலாவுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தப் படம் எனக்குப் புதுசு. இந்தப் படத்தில் நடித்த 60 நாட்களும் அமைதியாக, நடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அது புதிதாக இருந்தது.
இந்தப் படம் எதைப் பற்றியது?
இந்தப் படம் மூன்று கதாபாத்திரங்களைப் பற்றியது. முதலாவதாக பிச்சை என்ற கதாபாத்திரம். எப்போதுமே பொய் சொல்லிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம். மங்கா என்று மற்றொரு பாத்திரம். அவன் மிகவும் கோபக்காரன். பிச்சையின் மனைவி சுபத்திரா. அவளுக்கு காது கேட்காது. இந்த பாத்திரங்களைச் சுற்றி கதை நடக்கிறது. வாழ்வில் எப்போதுமே இரு விஷயங்கள் உள்ளேயே இருக்கும். ஒன்று, பொய், இன்னொன்று கோபம். இதை ஆண்கள்தான் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.
அப்படியான சூழலில், பெண் ஒருத்தி அவர்களுக்கு வாழ்வைச் சொல்லித்தருகிறாள். அவள் எப்படி பிச்சையையும் மங்காவையும் மாற்றுகிறாள் என்பது கதை. இந்தப் படம் ஒரே நாளில் நடப்பதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது. பிச்சையும் மங்காவும் சந்திக்கும்போது அவன் ஏதோ மங்காவைப் பற்றிச் சொல்லிவிடுகிறான். அதனால், கோபமடையும் மங்கா பிச்சையைத் துரத்துகிறான். பிச்சை பல பொய்களைச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறான் என்பதுதான் படம்.
நீங்கள் இயக்கும் படங்களில் வரும் பாத்திரங்கள் அனைவருமே ஒரு தீவிரத் தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நிஜ வாழ்வில் யாரும் அப்படி இருப்பதில்லை அல்லவா?
சினிமா நிஜவாழ்க்கை கிடையாது. சினிமா ஒரு ‘ஹைப்பர் ரியாலிட்டி’ (அதி எதார்த்தம்). இல்லாவிட்டால் அதைக் காசு கொடுத்துப் பார்க்க மாட்டோம். கண்களைத் திறந்துகொண்டே பார்க்கும் கனவு. நிஜத்தில் ஒரு வருடத்தில் நாம் நான்கு தருணங்களில் தீவிரமாக இருந்தால் அதிகம். ஆனால், சினிமா அந்தத் தருணங்களைத்தான் பதிவுசெய்கிறது. ஆகவே அதில் வரும் பாத்திரங்கள் தீவிரத்தன்மையுடன்தான் இருப்பார்கள். சாப்ளின் படங்கள், ஹிட்ச்காக் படங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.
என்னுடைய படங்களில் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அது நம் மனதுக்கு கொடுக்கும் ஒரு உடற்பயிற்சி. கிராமங்களில் சாமி ஆடுவார்கள். அப்போது அவர்கள் எப்படி ஒரு தீவிரத்துடன் இருக்கிறார்களோ, அதேபோலத்தான் சினிமா பார்க்கும்போதும் இருக்க வேண்டும். அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. ஆகவே அது தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால், அது கதாபாத்திரங்களின் உடல்மொழியில் தெரிந்துகொண்டேயிருக்க வேண்டுமா? உதாரணமாக, உங்கள் படங்களில் ஓடுபவர்கள், குனிந்துகொண்டே ஓடுகிறார்கள். நிஜத்தில் யார் அப்படிச் செய்கிறார்கள்?
அது ஒருவேளை எனக்குப் பிடித்திருப்பதால் நான் அப்படிச் செய்திருக்கலாம். இது என்னுடைய பாணி, உடல்மொழி. அதேபோல என் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் திடீரென இயங்குவார்கள். அது என் பாணி. என்னுடைய படங்களைப் பார்க்கும்போது முந்தைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒரு ஐந்து வயதுக் குழந்தையைப் போல புதிதாகப் பாருங்கள். ரொம்ப எளிமையாகப் பார்க்க வேண்டும். அது சினிமாவை ரசிக்க ரொம்பவும் அவசியம்.
என் படங்களில் கால்களை அதிகம் காட்டிக்கொண்டே இருப்பேன். ஏனென்றால் என் கதாபாத்திரங்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது, ஒரு விமர்சகராக “என்ன இது கால்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்” என்று கேட்பார்கள். ஆனால், இதை நான் குறைத்துக்கொள்ளப் போவதில்லை. அவை என் படத்தின் நிறைகள்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் படங்கள் மூலமாக நம்மை மகிழ்வித்தவர்கள்; அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள். நீங்கள் இவ்வளவு நேரம் சொன்ன வரையறைக்குள் அவர்களது படங்கள் அடங்குகின்றனவா?
இல்லை. இதை நீங்கள் வேறுமாதிரி புரிந்துகொள்ள வேண்டும். நாம் திரையரங்கிற்குள் நுழையும்போது, அந்தப் படத்தில் வரும் எல்லோரும் மகா புருஷர்களாகிவிடுகிறார்கள். அவர்கள் ஒரு 20-30 வருடங்களுக்கு மகாபுருஷர்களாக பல வேடங்களைப் போடுகிறார்கள். சாமியாக, ஆசாமியாக, மந்திரவாதியாக, காப்பிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். நம் பாட்டி கதைகளில் எல்லாமே ஹீரோயிசம் இருக்கும்.
ஹீரோயிசம் என்றால் குத்துப்பாட்டு ஆடுவதோ, பத்துப் பேரை அடிப்பதோ அல்ல. ஒரு பிரச்சனை வரும்போது, ஒரு மனிதன் தன் சக்தியை வைத்து எப்படி எதிர்கொள்கிறானோ அதுதான் ஹீரோயிசம். அவனைத்தான் நாம் திரையில் பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் பலவிதமான பாத்திரங்களில் பல ஆண்டுகள் நடித்திருக்கிறார்கள். அப்படியாக அவர்கள் மகாபுருஷர்களாகிவிடுகிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ரொம்வும் காலியானதாக இருக்கும். இவர்கள்தான் அதை நிரப்புகிறார்கள்.
நமக்குள் இருக்கும் ஒரு நாயக எண்ணங்களை, அவர்கள் மூலமாக திரையில் பார்த்துக்கொள்கிறோம். தனி வாழ்வில் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. என் படங்களில் ஏன் அப்படியான நாயகர்கள் இடம்பெறவில்லையென்றால், என் நாயகர்கள் வேறு மாதிரியானவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், சாதாரணமான விஷயங்களைச் செய்வார்கள்.
ஒரு இயக்குனராக உங்களுக்கென ஒரு அடையாளம் இருக்கிறது. ஆனால், ஒரு நடிகராக எந்த இடத்தில் நீங்கள் உங்களைப் பொருத்திக்கொள்கிறீர்கள்?
எந்த இடத்திலும் பொருத்திக்கொள்ளவில்லை. நான் எழுதும் கதையை ஒரு நடிகரிடம் சொன்னால் அவர்களுக்கு பெரிதாக அதில் ஆர்வம் இருப்பதில்லை. “இந்தக் கதையில் நான் என்ன சார் செய்கிறேன்?” என்றுதான் கேட்பார்கள். அவர்களுக்கு நான் விளக்கிச் சொல்ல முடியாது. அம்மாதிரிக் கதைகளில் நான் நடிக்கிறேன். நந்தலாலா படத்தில் நடிக்க நிறைய நடிகர்களிடம் கேட்டேன். யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் அதில் நான் நடித்தேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு, யாரிடமும் கேட்க வேண்டுமெனத் தோன்றவேயில்லை. கேட்டாலும் யாரும் நடிக்க மாட்டார்கள் என்று நானே நடித்தேன். ஆக, இம்மாதிரி பரிசோதனை முயற்சிகளில் நானே நடித்துக்கொள்கிறேன். இம்மாதிரி படங்களில் நடிக்கும்போது அது பலவித உணர்ச்சிகளைத் தருகிறது. அவற்றை அனுபவிப்பதற்காக நான் அந்தப் படங்களில் நடிக்கிறேன். நான் ஒரு வழக்கமான நடிகனாக இல்லாமல், வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் நடிக்கும்போது அது வேறு ஒரு உணர்வைத் தருகிறது. அதற்காக நடிக்கிறேன்.
வேறொரு இயக்குனரின் படங்களில் நடிக்கும்போது, நீங்களும் ஒரு இயக்குனர் என்ற எண்ணம் ஏற்பட்டு, இயக்குனரின் பணிகளில் குறுக்கிட்டிருக்கிறீர்களா?
இல்லை. அந்த எண்ணத்தை நிறுத்திவிடுவேன். நான் இப்போது தியாகராஜா குமாரராஜா படம் ஒன்றில் நடிக்கிறேன். அவரிடம் கேட்டால் தெரியும். ஒரு இடத்தில்கூட நான் என்னுடைய கருத்தைச் சொன்னது கிடையாது. அவருடைய பார்வையில் படம் வர வேண்டும். அது என் படம் கிடையாது. நான்தான் அந்தப் படத்திற்கு கதை எழுதியிருந்தால்கூட, நான் அமைதியாக அவர் சொன்னபடி நடித்துக்கொடுத்துவிடுவேன். எல்லா நேரங்களில் நாம் ரொம்பவும் ஈடுபாட்டோடு இருக்க வேண்டியதில்லை. ஒரு இயக்குநர் தன் பார்வையில் படத்தை உருவாக்க கைகொடுத்தால் போதும்.
உங்கள் திரைப்படங்கள் மூலமாகவும் நடிப்பின் மூலமாகவும் நீங்கள் சொல்லும் கருத்துகள் மூலமாகவும் ஒரு ‘எக்ஸென்ட்ரிக்’ மனிதராக தோற்றம்தர முயல்கிறீர்கள்..
ஒரு கலைஞன் அப்படித்தானே இருக்க முடியும்? எல்லோரும் ஓடுவதைப்போல ஒரு வட்டத்திற்குள் நானும் ஓடினால், நான் ஒரு கலைஞன் அல்ல. என்னை எக்ஸென்ட்ரிக் என்று சொல்வதை பெருமையோடு ஏற்றுக்கொள்கிறேன்.
உங்களுடைய படங்களில் அரசியல் இருக்கிறதா, அது என்ன அரசியல்?
நிச்சயமாக அரசியல் இருக்கிறது. ஆனால், அது தற்போது நடக்கும் அரசியல் அல்ல. எப்போதுமே இருக்கும் அரசியல். வன்முறையென்றால் என்னவென்று தெரியாத குடும்பம், தன் குடும்பத்தில் ஒருவர் சிதைக்கப்பட்டால் கையில் கத்தியோடு இறங்குகிறார்களே, அதுதான் எப்போதுமே இருக்கும் அரசியல். தொன்றுதொட்டு சமூகம், இருட்டை பிசாசு என்கிறது பிசாசு மோசமானது என்கிறது.
ஆனால், நான் பிசாசு ஒரு தேவதை என புதிதாக சொல்கிறேன். அதுதான் என் அரசியல். ஒரு நாயைக் கொல்லக்கூட யாருக்கும் உரிமையில்லை என்று சொல்வதுதான் துப்பறிவாளன். மேலோட்டமாகப் பார்க்கும்போது அது ஒரு கமெர்ஷியல் படத்தைப் போல இருக்கும். உள்ளே ஒரு அரசியல் இருக்கிறது. எதிர்காலத்து அரசியலைத்தான் நான் பேசுகிறேன். இப்போது ஒருவர் கட்சி ஆரம்பித்தார், ஒரு கருத்து சொல்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசினால் அது வெறும் செய்திகளுக்குத்தான் உதவும். நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க வேண்டிய சினிமாவுக்கு அது உதவாது.