பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த குழுவுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கைபர் – பக்துங்கா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இரண்டு ஏவுகணைகளை வீசியதில் ஹக்கானி இயக்கத்தின் சிரேஸ்ட தளபதி ஹவாரி உள்பட மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கியிருந்த முகாமின்மீது அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவின் ஊக்கத்தை குறைத்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.