யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கணிதம் தொடர்பிலான பிர்சசனைகளுக்கு மிக எளிய முறையில் தீர்வைக் காணக்கூடிய உபகரணம் ஒன்றை அமைத்து, அதனை காட்சிப்படுத்திய பின்னர் இந்த சர்வதேச கண்காட்சிக்கான சந்தர்ப்பத்தை அந்த மாணவர் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்ததன் மூலம் தேசிய ரீதியில் 32 விருதுகளையும், சர்வதேச ரீதியில் 81 விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த போட்டி மற்றும் கண்காட்சி அடுத்தமாதம் 1ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் இடம்பெற உள்ளதுடன், 97 நாடுகளை உள்ளடக்கிய சுமார் 1000 பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் குறித்த விருது, 16.10.2017 கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
சம்மாந்துறை – கோரக்கர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு ‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் குறித்த விருது, 16.10.2017 கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும், தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், இவருக்கு அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இலவச அரச போக்குவரத்து வசதிகள், இலவச மருத்துவ சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குகொள்வதற்கான வசதிகள் மற்றும் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்ற இவர் தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வறுமை நிலையிலும் சாதனை படைத்துவரும் இளம் கண்டுபிடிப்பாளர் வினோஜ்குமார்
2012ஆம் ஆண்டு
இலங்கை பொறியியலாளர் நிறுவனம் (I.E.S.L.) வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ( JUNIOR INVENTOR OF THE YEAR COMPETITION – 2012) போட்டியில் 2012க்கான தேசிய நிலைப்போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப்பேரில் தமிழ்மாணவன் ஒருவரும் தெரிவாகியுள்ளார்.
கிழக்கு மாகாணம் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க்கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவரே தெரிவு செய்யப்பட்டவராவார். கிழக்கில் முதலிடம்பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீகோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரம் பயின்று வருகிறார். இவர் தேசியநிலைப் போட்டியிலும் தெரிவாகியுள்ளார். அதன்படி இலங்கையில் தெரிவான மொத்தம் பத்து மாணவர்களில் ஒரேயொரு தமிழ்மொழி மூல மாணவன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளான். ஏனைய 09 பேரும் சிங்கள மாணவர்களாவர்.
இந்தப் பத்துப்பேரில் மூவருக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. அதற்கான தெரிவு எதிர்வரும் 12 13 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் நடைபெறும். அதிலும் வினோஜ்குமாருக்கு அதிக வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது.
இவரது கண்டுபிடிப்பு என்ன?
மெழுகுவர்த்தியை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தை (Candle Maker with waste wax . The Machine that uses Candle for recycle) இவர் கண்டுபிடித்துள்ளார். மெழுகுவர்த்தியை எரிக்கும்போது வீணாகும் மெழுகிலிருந்து புதிய மெழுகுதிரியை மீண்டும் உருவாக்குதல் இதன் நோக்கமாகும். இதன் மூலம் வீணாகும் மெழுகை மீளப்பயன்படுத்துதல் அத்துடன் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதனால் சூழல் மாசடைதலிலிருந்தும் தடுக்கமுடியும்.
உதவியோர்
இவரது கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தனது சொந்த நிதியில் நிதியுதவி அளித்துள்ளார். அதிபர் எம்.விஜயகுமாரன் மற்றும் பல ஆசிரியர்கள் பக்கபலமான உதவியுள்ளனர்.
தெரிவான முறை
இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் இவ்வாண்டுக்கான போட்டிக்கு நாடெங்கிலுமிருந்து 1900 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் கிழக்கு மாகாணத்திலிருந்து 154 பேர் விண்ணப்பித்தனர்.
கிழக்கு மாகாண மட்டத்தில் போட்டியிட்ட 154 பேரில் சோ.வினோஜ்குமார் முதலிடம்பெற்று தேசிய நிலைப்போட்டிக்குத் தெரிவானார்.இவருடன் மேலும் 12பேர் தெரிவானார்கள்.
கடந்த 22ம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய நிலைப்போட்டியில் நாடெங்கிலுமிருந்து 81 மாணவர்கள் போட்டியிட்டனர். அவர்களுள் பத்து மாணவர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாகத் தெரிவானார்கள் .அந்தப் பத்துப் பேரில் வினோஜ்குமாரும் ஒருவராவார்.
இவருக்கு உதவவேண்டுமா?
இவர் மிகவும் பின்தங்கிய வறியகுடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் இருவரும் தொழில்இல்லாதவர்கள். தந்தையார் கூலிவேலை செய்பவர் ஆவார். இவர்களுக்கு 03 பிள்ளைகள். மூத்தவன் டினேஸ்குமார் மேற்படி பாடசாலையிலிருந்து முதன் முதல் பல்கலைக்கழகம் சென்றிருக்கின்ற மாணவன். மற்றயவர் இடைநடுவில் தவறியவராவார்.
மொத்தத்தில் வறுமையின் பிடியில் சிக்குண்டுகிடக்கும் இவருக்கு போதிய வசதிவாய்ப்புகளை வழங்கினால் மேலும் பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்யக்கூடும். சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் காட்டும் பரிவும் தட்டிக்கொடுப்பும் ஊக்கமும் அவரை மேலும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவுமென எதிர்பார்க்கலாம்.
பாடசாலையில் அவரைச் சந்தித்தபோது இளம் கண்டுபிடிப்பாளன் வினோஜ்குமார் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார்.
இளம் வயதிலிருந்தே எதையும் கண்டுபிடிக்கவேண்டும் எதையும் ஏனையோரைவிட சற்று வித்தியாசமாகச் செய்துவிடவேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் வேட்கையும் என்னுள்ளே இருந்தது.
முதன் முதலில் மூலிகை அரைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தேன். அதன் மூலமாக 2007 முதல் வலய மட்ட புத்தாக்குனர் தெரிவுப் போட்டியிலே தெரிவாகினேன். தொடர்ந்து பிரதிவருடமும் மாகாணம் தேசிய நிலை வரை தெரிவாகி வந்துள்ளேன்.
பின்பு கழிவுப்பொருட்களைக்கொண்டு எலிப்பொறியைத் தயாரித்தேன். எலியை உயிரோடு பிடிக்கக்கூடிய எளிய பொறி இது. அதற்கு ஆக ஒரு ஆணியும் கம்பியுமே வெளியிலிருந்து வாங்கவேண்டியிருந்தது. ஏனையவை கழிவுப்பொருட்கள். கழிவுகளைக்கொண்டு இரசாயனப் பசளைகளைத்தயாரிக்கும் இயந்திரம் தயாரித்தேன்.
கதிரையில் இருக்கும்போது சுழலும் மின்விசிறி நாம் எழும்பியதும் தானாக நின்றுவிடும் ஒரு நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். சிலர் மறந்துபோய் நிறுத்தாமல் போவதுண்டு. அதற்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது.
தற்போது மெழுகுவர்த்தியை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு பரிசும் கிடைத்தது. மேலும் தெரிவானால் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இறைவனின் சி;த்தம் அவ்வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்.
இனி
தேங்காயை இலகுவாக உரிக்கும் இயந்திரத்தை தயாரித்து வருகின்றேன்.
ஆவியைக்கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். றெஜிபோமை இலகுவான நாம் விரும்பியவாறு வெட்ட புதிய பொறிமுறைநுட்பம் ஒன்றை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளேன்.
எதிர்காலம்?
கணனி பொறியியலாளராக வரவேண்டுமென்பது அவா.
குறிப்பு
இவர் ஏலவே இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடாத்திய சஹசக் நிமவும் என்ற போட்டியிலும் தேசிய நிலைப்போட்டிக்குத் தெரிவாகி தோற்றியுள்ளார். அதன் முடிவு 15ம் திகதி வெளியாகும். 30 பேர் தெரிவாவர். அதில் நானும் தெரிவாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறதென ஆணித்தரமாக் கூறினார். (படமும் தகவலும் காரைதீவு வி.ரி.சகாதேவராஜா)