குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய ஐஸ் ஹொக்கி வீராங்கனைகள் தென்கொரியாவிற்கு சென்றுள்ளனர். எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நோக்கில் இவ்வாறு வடகொரிய ஐஸ் ஹொக்கி வீராங்கனைகள் தென்கொரியாவிற்கு சென்றுள்ளனர்.
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் வட மற்றும் தென் கொரிய நாடுகள் கூட்டாக இணைந்து ஐஸ் ஹொக்கி குழுவொன்றை களமிறக்க உள்ளது. இந்தவகையில் 12 வீராங்கனைகளும் அதிகாரிகளும் தென் கொரியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த வீராங்கனைகள் தென் கொரிய வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
ஒரே கொடியின் கீழ் இரு நாடுகளின் வீராங்கனைகளையும் இணைத்து போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கு இரு நாடுகளும் அண்மையில் இணங்கியிருந்தன. வடகொரிய அணுவாயுத பரிசோதனைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஹொக்கி போட்டியில் ஒரே அணியாக போட்டியிடுவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது