ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை முழுமையாகப் பார்வையாளர்கள் பார்வையிட குடியரசு தினமான இன்றிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் 2015 அன்று அப்துல் கலாம் உயிரிழந்த நிலையில் அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டு கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான கடந்த ஜூலை 27ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.
.
கலாம் நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு காட்சிக் கூடங்கள் மட்டும் முழுமையாக பணிகள் முடியாத நிலையில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் 69-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது நான்கு காட்சிக் கூடங்களுக்குள்ளும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் பொது மக்கள் கலாம் நினைவகத்தை முழுமையாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது