கூடங்குளத்தில் தற்போது உள்ள அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 2 அணு உலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் இந்தியாவின் 69வது குடியரசு தின விழா கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வளாக இயக்குனர் தில்பக்சிங் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகள் முழு அளவிலான 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன எனவும் இதுவரையிலும் இந்த அணு உலைகளில் 22 ஆயிரத்து 800 கோடி மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் 3 மற்றும் 4வது அணு உலைக்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து திட்டமிட்டப்படி இடம்பெற்று வருவதாகவும் 5 மற்றும் 6வது அணு உலைக்கான களப்பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிலத்தை தேர்ந்தெடுக்கப்பட்டு அளவெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது எனவும் இந்த பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் உள்ள மக்கள் தற்போது இருக்கும் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிதாக அணு உலைகளை அமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளமை அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.