Home இலங்கை இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா? நிலாந்தன்

இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா? நிலாந்தன்

by admin

தமிழ் மக்களின் முடிவை சர்வதேசம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது?
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு விடயத்தை அழுத்திச் சொல்லியிருக்கிறார். இத் தேர்தல் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு அல்ல என்பதே அது. உள்ளூர் அதிகாரங்களைப் பிரயோகித்து ஊர்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்தலே இதுவென்று அவர் சுட்டிப்பாகப் பேசியிருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரையிலும் இத்தேர்தலை இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பாக அறிவிக்கவில்லை என்று அவர் மேலும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

ஆனால் கட்சியின் செயல்த் தலைவராகக் காணப்படும் சுமந்திரன் சில வாரங்களுக்கு முன் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வைத்தும், வடமராட்சியில் வைத்தும் என்ன சொன்னார்? இடைக்கால அறிக்கையை துணிந்து மக்கள் முன் கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார். கூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசியலமைப்பு நிறைவேறாது என்று சொன்னார். அதே சமயம் கடந்த வாரம் சம்பந்தர் என்ன சொல்லியிருக்கிறார்? ‘சர்வதேச ரீதியில் இந்தத் தேர்தலை பலரும் உற்று நோக்குகிறார்கள்’ என்றும் ‘தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்றும் அவர் ஆற்றிய உரைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

சம்பந்தரும், சுமந்திரனும் பேசிய கருத்துக்களின் சாராம்சம் என்ன? கூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசியலமைப்பு நிறைவேறாது என்பதன் அர்த்தம் என்ன? அதே போல்; தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது? உள்ளூரில் ஒரு மாணிக்கமோ அல்லது கந்தசாமியோ தெரிவு செய்யப்பட்டால் அதனால் உலக சமூகத்திற்கு என்ன நன்மை ? என்ன தீமை ? சாதாரண தமிழ் வாக்காளர்கள் அது மாணிக்கத்துக்கும் கந்தசாமிக்கும் போடும் வாக்குகளாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அனைத்துலக அளவில் அது எப்படி வியாக்கியானம் செய்யப்படும்?இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு அல்லது எதிப்பாகத்தானே அது பார்க்கப்படும்? மாணிக்கமோ அல்லது கந்தசாமியோ எந்தக்கட்சியின் ஆட்கள் என்பதே வெளியுலகத்துக்கு முக்கியம். அந்தக் கட்சி இடைக்கால அறிக்கையை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதே அவர்களுக்கு முக்கியம். சரி. இடைக்கால அறிக்கை ஏன் அவர்களுக்கு முக்கியம்?

ஏனென்றால் அந்த அறிக்கையை ஆதரிக்கும் கட்சி வென்றால்தான் யாப்புருவாக்க முயற்சிகள் தொடர்ந்து தடையின்றி முன் நகரும். ஒரு புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டால்தான் இப்போதுள்ள கூட்டரசாங்கம் மேலும் பலமடையும். இந்த அரசாங்கத்தின் ஆயுளும், யாப்புருவாக்க முயற்சிகளின் ஆயுளும் ஒன்றுதான். புதிய யாப்பு வெற்றி பெறவில்லையென்றால் பழைய யாப்பின் பிரகாரம் அதாவது இப்போதுள்ள யாப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் பிரயோகத்தில் இருக்கும். அதன்படி 2020ல் அல்லது கடைசியாகக் கிடைத்த நீதிமன்ற விளக்கத்தின் பிரகாரம் 2021ல் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். அப்படியொரு தேர்தல் நடந்தால் அதில் மகிந்த அணி கோத்தபாயவைக் களமிறக்கும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. கோத்தபாய களமிறக்கப்பட்டால் பெரும்பாலும் அவருக்கே அதிகரித்த வெற்றிவாய்ப்புக்கள் இருக்கும். அதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.  முதலாவது அவர் யுத்தத்தை வென்று கொடுத்த ஒரு தலைவர். சாதாரண சிங்கள வாக்காளர்களைப் பொறுத்தவரை அது ஒரு கிடைத்தற்கரிய வெற்றி. எனவே ஒரு வெற்றி நாயகனை அவர்கள் அதிகம் விரும்பக்கூடும்.

இரண்டாவது காரணம் – கடும்போக்குச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரை மைத்திரியோ ரணிலோ அவர்களுக்கு தலைமை தாங்க முடியாது. ரணில் அவரது தோற்றத்திலும், நடை, உடை, பாவனையிலும், வாழ்க்கை முறையிலும் மேற்குமயப்பட்ட ஒருவராகவே தோன்றுகிறார். மைத்திரியோ ஓர் அரசனைப் போல வாழ ஆசைப்படாத சாதுவான, விறைப்பற்ற அப்பாவியான ஓர் ஆளுமை. அண்மையில் ஒரு கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்புச் செய்ய முற்பட்டார். யு.என்.பி.யின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை மதிக்கவில்லை என்பதையடுத்து அவர் அவ்வாறு கோபித்துக் கொண்டு வெளியேற முற்பட்டார் ஆனால் ஒரு தலைவராக அங்கு அவர் தனது அதிகாரங்களைப் பிரயோகித்து கூட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் .மாறாக கோபித்துக் கொண்டெல்லாம் வெளியேறக்கூடாது. இது அவருடைய தலைமைத்துவ ஆளுமையின் பொலிவின்மையைக் காட்டுகிறது என்று ஒர் அரசியட் செயற்பாட்டாளர் தெரிவித்தார். எனவே மத்திரி ,ரணில் ஆகிய இருவரோடும் ஒப்பிடுகையில் ராஜபக்ஷக்கள் விறைப்பாகவும், கடும் மீசைகளோடும், சால்வைகளோடும், மிடுக்காகவும் காட்சியளிக்கிறார்கள். எனவே கடும்போக்கு சிங்கள வாக்குகள் அவர்களுக்கே கிடைக்கும்.

மூன்றாவது காரணம் மைத்திரியைக் கொண்டு வந்த மென்போக்கு சிங்கள வாக்காளர்கள் கூட்டரசாங்கத்தின் மீது சலிப்படைந்து விட்டார்கள் என்பது. பொதுவாக ஓர் ஆளும் கட்சிக்கு எதிராக மேலெழும் யுவெநைளவயடிடiளாஅநவெ எழவநள என்றழைக்கப்படும் அதிகாரத்தின் மீது சலிப்படைந்த வாக்குகளும் மகிந்தவுக்கே விழும்.

நான்காவது காரணம் தமிழ் வாக்குகளும் இம்முறை முழுமையாக மைத்திரிக்கே விழும் என்று சொல்ல முடியாது. தமிழ் மக்கள் கணிசமான அளவிற்கு கூட்டரசாங்கத்தின்மீது சலிப்படைந்து விட்டார்கள். பொங்கல் தினத்தன்று சுமந்திரனுக்கு எதிராக மண் அள்ளி எறிந்து திட்டிய தாய்மார்கள் நிச்சயமாக மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை. இப்படிப் பார்த்தால் மிச்சமிருப்பது மலையகத்;தமிழ் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும்தான். இதில் மிகவும் நிச்சயமானவை முஸ்லிம் வாக்குகள் அவை மைத்திரிக்கே விழும்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் மைத்திரியைத் தெரிந்தெடுத்த முழு வாக்குகளும் இம்முறை மைத்திரிக்குத்தான் விழும் என்றில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தல் என்று ஒன்று வரும் போது அதில் கோத்தபாய களமிறங்குமிடத்து நிலமைகள் எவ்வாறு அமையும் என்ற அச்சம் மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் உண்டு. எனவே கோத்தபாய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்புக்களைத் தவிர்ப்பதென்றால் யாப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். இந்த இலக்கை முன்வைத்தே யாப்பு மாற்றப்படுவதை மேற்கும், இந்தியாவும் விரும்புகின்றன. அதற்கு இப்போதுள்ள கூட்டரசாங்கம் அவர்களுக்குத் தேவை. வீட்டுச் சின்னத்திற்கு கீழான இணக்க அரசியலும் அவர்களுக்குத் தேவை. இதை இன்னும் அதன் உள்ளோட்டத்திற்கூடாகச் சொன்னால் இப்போது இருப்பதைப் போல எஸ்.எல்.எவ்.பி பிளவுண்டிருப்பதை மேற்கும், இந்தியாவும் விரும்புகின்றன. மைத்திரியும், மகிந்தவும் எஸ்.எல்.எவ்.பியை பங்கு போடும் ஒரு நிலமை உள்ளவரை கூட்டரசாங்கமும் நிலைத்திருக்கும். ரணிலும் பாதுகாப்பாக இருப்பார்.

மேற்கையும், இந்தியாவையும் பொறுத்தவரை எஸ்.எல்.எவ்.பியை விடவும் பலமாகக் காணப்படும் யு.என்.பியே அவர்களுடைய முதற்தெரிவாகும். ஏனெனில் எஸ்.எல்.எவ்.பி எனப்படுவது அதிக பட்சம் உள்நாட்டை நோக்கி திரும்பியிருக்கும் ஒரு கட்சியாகும். உள்நாட்டில் சிங்கள, பௌத்த தேசியவாதத்தை ஒப்பீட்டளவில் அதிகம் பலப்படுத்தும் ஒரு கட்சியாகும். அதாவது எஸ்.எல்.எவ்.பி எனப்படுவது யு.என்.பியோடு ஒப்பிடுகையில் அதிகரித்த அளவில் உள்நாட்டுத் தன்மை மிக்கது. அல்லது தேசியத் தன்மைமிக்கது எனலாம். ஆனால் யு.என்.பி அப்படியல்ல. அது அதிகபட்சம் ஒரு முதலாளித்துவக் கட்சி. மேற்கத்தைய முதலாளித்துவத்தின் தோழமைக்கட்சி. மேற்கத்தய முதலாளித்துவத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் ஒரு கட்சி. இது காரணமாகவே இலங்கைத் தீவில் இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்கான ஏதோ ஒரு தீர்வை யு.என்.பியே கொண்டு வந்திருக்கிறது. இந்திய – இலங்கை உடன்படிக்கை, ரணில் – பிரபா உடன்படிக்கை இரண்டுமே யு.என்.பியின் காலத்தில் கொண்டு வரப்பட்டவைதான்.

இதன் அர்த்தம் யு.என்.பியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க விரும்பியது என்பதல்ல. அது இனவாதம் அற்ற கட்சி என்பதுமல்ல. மாறாக உலக முதலாளித்துவத்தின் விருப்பத்திற்கேற்ப வணிகத் தேவைகளுக்காக போரை நிறுத்த வேண்டிய ஒரு தேவை யு.என்.பிக்கு அதிகமிருந்தது. எனவே பெயரளவிலாவது சில தீர்வுகளை அக்கட்சி கொண்டு வந்தது. அதே சமயம் எஸ்.எல்.எவ்.பி கொண்டு வர முயன்ற தீர்வுப் பொதிகளை யு.என்.பியே எதிர்த்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஜெயவர்த்தனாவின் கண்டி யாத்திரையும் ரணில் விக்கிரமசிங்க சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை நாடாளுமன்றத்தில் வைத்து எரித்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். உள்நாட்டுத் தேவைகளுக்காக அது இனவாதத்தைக் கக்கும் எனினும் உலக முதலாளித்துவத்தின் தேவைகளின் நிமித்தம் ஏதோ ஒரு தீர்வை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை யு.என்.பிக்கு இருந்து வந்துள்ளது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இது விடயத்தில் எஸ்.எல்.எவ்.பியை விடவும் யு.என்.பி நெகிழ்ச்சி கூடிய ஒரு கட்சிதான்.

இப்பொழுது கூட்டரசாங்கத்தில் சந்திரிக்காவும் ஒரு பங்காளி. அதே சமயம் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரான சம்பந்தர் தமிழ்த்தரப்பில் உண்டு. அதிலும் குறிப்பாக இடைக்கால அறிக்கையையும் யாப்புருவாக்க முயற்சிகளையும் உள்நாட்டிலும், உலகம் முழுவதிலும் எடுத்துச் செல்லவும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவும் ஒரு சுமந்திரன் உண்டு. தமது தலைவர்கள் என்ன செய்கிறார்கள். என்ன கதைக்கிறார்கள்? ஏன் அதைச் செய்கிறார்கள் என்பவற்றைப் பற்றி தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ தமது தொகுதி வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிப்பதற்கு கொஞ்சம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உண்டு. இந்தக் கூட்டு இதற்கு முன்னெப்பொழுதும் இலங்கைத் தீவில் ஏற்பட்டிராத ஒரு கூட்டு. இப்படியொரு கூட்டை பாதுகாத்தால் தான் நாடாளுமன்றத்தில் புதிய யாப்பிற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்க வைக்கலாம். எனவே மேற்கு நாடுகளும், இந்தியாவும் இக்கூட்டை ஆதரிக்கின்றன. எனவே யாப்புருவாக்க முயற்சிகளையும் பாதுகாத்து வருகின்றன. இடைக்கால அறிக்கை தொடர்ந்தும் முன் நகர வேண்டும் என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் அக்கறைப்பட இதுதான்; காரணம்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அண்மையில் வடக்கு – கிழக்கு இணைப்பைக் குறித்து தெரிவித்த கருத்துக்களை இங்கு நோக்க வேண்டும். அதேபோல மைத்திரி தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டதையும் இந்தப் பின்னணிக்குள் வைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கும் இந்தியாவும் இடைக்கால அறிக்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிப்பதற்குக் காரணம் இதுதான். தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவல்ல. இப்படிப் பார்த்தால் நடக்கவிருக்கும் எல்லாத் தேர்தல்களிலும் இக்கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதத்தில் முடிவுகள் கிடைப்பதையே மேற்படி நாடுகள் விரும்பும். அதாவது ‘தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்பதன் பொருள் இதுதான்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More