ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
65 வயதுடைய பிரபல ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் றைம்ஸ்’ இதழ் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர்.
அந்த வரிசையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் தற்போது இணைந்துள்ளார்.
2013-15ம் ஆண்டுகளில் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பணியாற்றிய இவர், நியூயோர்க் தென்மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுத்து உள்ளார். 11 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டு மனுவில் அவர், வெயின்ஸ்டீனின் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது கடுமையான பாலியல் தொல்லை சூழலில் பணிபுரிய வேண்டி இருந்ததாகவும், முடிவில்லா பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், வீட்டுப்பணியாளர்கள் தங்கள் வேலையை செய்ய வருவதற்கு முன்பாக வெயின்ஸ்டீன் பயன்படுத்திய ஆணுறைகளை அப்புறப்படுத்தி, அறைகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.
காரில் பயணிக்கும்போது அவருடன் பின் இருக்கையில் இருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவர் பாலியல் தொல்லை தந்தபடியே இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 21 நாட்களுக்குள் வழக்கு பற்றி பதில் அளிக்குமாறு வெயின்ஸ்டீனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.