தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சேர்ந்தே, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தம்முடன் கலந்தோலோசிப்படவில்லை எனத் தெரிவித்த அவர் அதன் பின்னர்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது எனவும் தெரிவித்துள்ளர். மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சி வேட்பாளரை ஆதரித்து, இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.
முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்காகவும் வடக்கு கிழக்கில் உள்ள கணவன்மாரை இழந்த பெண்களுக்கு போன்ற பல காரணங்களுக்காகத்தான் தாம் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் வெற்றியானது, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த கருணா, பிள்ளையானை தான்தான முதலமைச்சராக்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றத்தான் கிழக்கில் 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறுத்தப்பட்டதனால்தான் நமது இளைஞர்கள் எல்லாம் தற்போது உயிருடன் இருக்கின்றார்கள் எனவும் இன்றுவரை யுத்தம் நடைபெற்றிருந்தால் அழிவுகள்தான் இடம்பெற்றிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விடுதலைப் போராளிகளாகவே இணைந்த தாம் பின்னர் பயங்கரவாதிகளாக மாறியதற்கு காரணம் இந்தியப்படையை விரட்டிடித்தமைதான எனவும் தெரிவித்துள்ளார்.