திருடர்களை பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு, தூய்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாதென ஜனாதிபதி தெரிவித்தார்.
சிலரால் தமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரையும் தம்முடன் ஒரே அணியில் அணிதிரளுமாறு தாம் அழைப்பு விடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (29) பிற்பகல் ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தமது குறிக்கோள்களை நிறைவேற்ற எவரும் எவ்வகையில் செயற்பட்டபோதிலும் நாட்டிற்கு தேவையான தூய்மையான அரசியல் பயணத்தினை எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தான் வெற்றிகொள்வேன் என வலியுறுத்திய ஜனாதிபதி திருடர்கள் அற்ற, திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாத, அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தூய்மையான தேசத்தை கட்டியெழுப்பி முன்னோக்கி செல்ல தாம் அழைப்பு விடுப்பதாக ; தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்விடைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு தற்போது கட்சி வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஊழல் மோசடிகளற்ற தூய்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கும் நாட்டை நேசிக்கும் சகல மக்களும் தம்முடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.