கடந்த காலங்களில் விவசாய செய்கையில் ஈடுபட்டு, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பயிரழிவுகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு உரிய நட்டஈடுகள் மற்றும் மானிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அண்மைக் காலமாக நாட்டில் அரிசி உட்பட்ட விவசாய உற்பத்திகளில் தட்டுப்பாடுகள் நிலவுகின்ற சூழலில், எமது விவசாயத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உருளைக் கிழங்கு செயi;கயாளர்களுக்கு விஷேட வரிச் சலுகைகளை வழங்கப் போவதாக அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அதே போன்று, ஏனைய விவசாய உற்பத்திகள் தொடர்பிலும் அரசு அதிக அவதானமெடுத்து, போதிய வசதிகளை செய்து கொடுப்பதோடு, விவசாய மக்கள் தங்களது உற்பத்திகளில் வளர்ச்சி நிலைகளைக் காணும் வரையில் மேற்படி உதவிகளை அவர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதற்கும், அந்த உற்பத்திகளுக்கான போதிய சந்தைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், கடந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு முன்பதாக நான் நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரிடம் முன்வைத்திருந்த யோசனையை ஏற்று, விவசாய செய்கைகளுக்கு காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து விவசாய மக்களைக் காப்பாற்றுகின்ற நோக்கில,; பயிரழிவுகளுக்கான காப்புறுதித் திட்டம் இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கென எமது மக்கள் சார்பில் விவசாய அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அந்த வகையில், நெல் அடங்களாக, சோளம், சோயா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபா வழங்கக்கூடியதாக அமையவுள்ள காப்புறுதித் திட்டமும் எமது விவசாய மக்களுக்கு பயனுள்ளதாகவே அமைகின்றது.
எனினும், இந்தக் காப்புறுதித் திட்டமானது இந்த வருடமே நடைமுறைக்கு வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் பயிரழிவுகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படுவது நியாயமான ஏற்பாடகவே இருக்க முடியும்.
அந்த வகையில், தம்பிலுவில் பிரிவு கமநல சேவைகள் அதிகார எல்லைக்குட்பட்ட 26 கமக்காரர் அமைப்புகள் என்னிடம் நட்டஈடு தொடர்பில் கோரிக்கை ஒன்றை கையளித்துள்ளனர். இதேபோன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பயிரழிவுகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் அனைவருக்கும் நட்டஈடுகள் வழங்குவதற்கும், மானிய உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவசாய மக்கள் எதிர்கால சிறுபோகச் செய்கைகளில் ஈடுபடுவதற்கும் இந்த உதவிகளே உறுதுணையாக இருக்கும் என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா , விவசாய மக்கள் அனைவரும் மேற்படி பயிரழிவுகளுக்கான காப்புறுதித் திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.