குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பிலான ஏனைய விடயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயற்படத் தயார் என தென் கொரியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மாதம் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கூட்டாக இணைந்து கலாச்சார நிகழ்வுகளை நடாத்துவதற்கு இரு நாடுகளும் முன்னதாக இணங்கியிருந்தன.
எனினும், அண்மையில் இந்த கூட்டு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என வடகொரியா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கூட்டு கலாச்சார நிகழ்வு தவிர்ந்த ஏனைய குளிர்கால ஒலிம்பிக் குறித்த விடயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயற்படவே விரும்புவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய ஊடகங்கள் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனால் இவ்வாறு கூட்டு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பவில்லை என வடகொரியா தெரிவித்திருந்தது.