அமெரிக்காவில் கைதிகளை கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சிறைச்சாலையான குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த சிறைச்சாலை கியூபாவின் குவான்டனாமோ பகுதியில் உள்ளது. இங்குள்ள கைதிகளை சித்திரவதைக்குள்ளாக்கும் முறைகளை பற்றி உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இந்ததகவலை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுசபை கூட்டத்தில் அறிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான பயங்கர தீவிரவாதிகளை முந்தைய அரசு முட்டாள்தனமாக விடுதலை செய்தது எனவும் இதனால்தான் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வளர்ச்சயடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது ராணுவத்தின் கைது நடவடிக்கைகளை மறுசீராய்வு செய்யவும், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் வகையிலும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மர்டிஸ்சுக்கு உத்தரவிட்டு இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறைச்சாலையை மூடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.