குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்ந்து தான் ஆட்சி அமைத்து உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இந்த ஆட்சியில் என்ன அபிவிருத்தி நடைபெற்றது என உங்களால் கூற முடியுமா ? எமது ஆட்சியில் வீதிகள் , மின்சாரம் , தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தோம். பாடசாலைகள் , ஆய்வுகூட வசதிகள் புகையிரத சேவை என்பவற்றை ஏற்படுத்தி தந்தோம்.
அதெல்லாம் வடக்கு மக்களுக்கு மிகவிரைவாக பெற்று தந்தோம் ஏனெனில் தெற்கில் உள்ள மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் ஒரு நாட்டு மக்கள் எனும் வகையில் வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் தான் அத்தனை அபிவிருத்திகளையும் வடக்கு மக்களுக்கு விரைந்து செய்தது கொடுத்தோம்.
விவசாய காணிகளில் இருந்த வெடிபொருட்களை அகற்றி விவசாய நடவடிக்கைகளை ஊக்கிவித்தோம் பசளைகளை மானிய அடிப்படையில் 350 ரூபாய்க்கு வழங்கினோம். ஆனால் தற்போது அவ்வாறான வசதிகள் உண்டா ? பசளை வேண்டும் என இந்த அரசாங்கத்திடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பசளையை இறக்குமதி செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அது வரையில் பயிர்கள் காத்திருக்குமா ?
இந்த அரசாங்கம் என நான் சொல்வது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்ந்து தான். அந்த மூன்று கட்சியுமே இணைந்து அரசாங்கமாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.