குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தமிழ் தாய்மார்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறுவது ஏன் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ரஜீவ் கேள்வி எழுப்பி இருந்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதி எளிமையானவர், வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டு சென்று சாப்பிடுகின்றார், சிறுமிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி சிறுமியை சந்தித்தார், சிறுவர்களுடன் பொழுதை போக்கினார் என பலவாறாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் தமிழ் தாய்மார்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை.
கடந்த ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன் விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிடம் கையளிக்கபப்ட்டு உள்ளது. இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. வடக்கில் விடுவிக்கப்படும் காணிகள் அனைத்தும் கடந்த ஆட்சி காலத்தில் , விடுவிக்க இணக்கம் கண்ட காணிகளையே விடுவித்து உள்ளனர். இதுவரையில் புதிதாக எந்த காணியையும் விடுவிக்க வில்லை. என மேலும் தெரிவித்தார்.
00