அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த தேசியக் கட்சிகள் இரண்டும், ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் போலவும், தமிழ் பகுதிகளை, அபிவிருத்தி செய்ய தங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் எனவும் மத்தியில் இங்கு வந்து கேட்கிறார்கள் என, புளட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று வெள்ளிக்கிழமை (02.02.18) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கடந்த கலத்தில் தமிழ் மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அழிவுகளுக்கும் எந்தக் கட்சிகள் காரணங்காக இருந்தனவோ அந்த இரண்டு கட்சிகளும், தமிழர்களை மாறி மாறி ஆட்சிக்கு உட்படுத்தி இருந்தன.
சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் 1949 இலே இந்திய பாக்கிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டம், 1956 இலே சிங்களம் மாத்திரம் சட்டம், 1970 இலே தரப்படுத்தல் என ஒவ்வொரு விடையமாக தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அடிமைகளாக மாற்றுவதற்கு ஒவ்வொரு சட்டத்தையும் இயற்றினார்கள்.
இவை மாத்திரமின்றி ஒவ்வொரு வன்முறைகளையும், இந்தக் கட்சிகள் தூண்டிவிட்டு, தமிழர்களை துன்புறுத்திய காலங்களிலே, சாத்வீக ரீதியிலே உரிமைகளை வென்றெடுக்கலாம் என அந்தக் காலத்தில் தந்தை செல்வநாயகம் பல சாத்வீகப் போராட்டங்களை நடாத்தியிருந்தார்.
அவர் தலைமையில் நடாத்தப்பட்ட சாத்வீகப் போராட்டங்களெல்லாம் ஆயுதங்களால் அடக்கப்பட்ட போது, ஆயுதத்திற்கு அயுதம் தான் பதிலாக இருக்கும் என எமது தலைவர் உமா மகேஸ்வரன் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரைக்கும், பத்பநபா போன்றவர்களும், ஒரு உணர்வுடன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அங்கிருந்து இங்கு வந்து ரணில் விக்கிரம சிங்க பிரச்சாரம் செய்கின்றார் என்றால் இந்த தேர்தலுக்கு அவர் கொடுத்திருக்கின்ற முக்கியத்துவத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சனை, காணாமல் போனவர்களின் பிரச்சனை, அரசியல் கைதிகளின் பிரச்சனை, காணிவிடுவிப்பு பிரச்சனை, காணி அபகரிப்புப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மிகப்பெரிய அழுத்தங்களைக் தேசிய ரீதியில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியிலும் கொடுத்துள்ளது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசின்மேல் பல அழுத்தங்களை சர்வதேச நாடுகள் பல கொடுத்துக் கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.