கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கறுக்காய் தீவுப் பகுதிக்கு போக்குவரத்து சேவை இல்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பூநகரி நகரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இந்தப் பகுதிக்கு போக்குவரத்துக்கு பேருந்துகள் வருவதில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
பூநகரிப் பிரதேசத்தின் கறுக்காய் தீவுப் பகுதிக்கு பூநகரி நகரத்தில் இருந்து செல்லுவதற்கு எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத நிலை காணப்படுகின்றது. கறுக்காய் தீவுப் பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. கறுக்காய் தீவு மகா வித்தியாலயம் மற்றும் ஞானியர்மடம் பாடசாலை என்பன அமைந்துள்ளன.
இப் பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள் வருகை தந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தினமும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே இப் பகுதிக்கு வந்து செல்லுகின்றனர். அத்துடன் கறுக்காய் தீவுப் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கான போக்கு வரத்து வசதிகள் எவையும் இல்லை. அத்துடன் ஏனைய அரச அதிகாரிகள் தமது பணியின் பொருட்டு வந்து செல்லவும் போக்குவரத்து வசதி இங்கு இல்லை. எனவே பாடசாலை மற்றும் அரச அலுவலகங்களை கருத்தில் எடுத்து இப் பகுதிக்கான போக்குவரத்து வசதி ஒன்றை செய்து தருமாறு பிரதேச மக்கள் கோருகின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து வரும் பேருந்துகளை கறுக்காய் தீவுப் பகுதிக்கு சென்று திரும்பும் வசதி அல்லது குறுந்தூர பேருந்து சேவை ஒன்றை நடத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.