திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் பெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு எதுவும் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூப், யுஎஃப்ஓ முதலிய நிறுவனங்கள் ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுத்தும் வரை அதிக நாட்களுக்கு 34,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஒரு வாரத்துக்கு திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும் என்றும் நடைமுறையை கொண்டுள்ளது. இதனால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை சாதாரண நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு திரையிட 4,000 ரூபாயும், நீண்ட காலத்திற்கு 12,000 ரூபாயையும் கட்டணமாகப் பெறவும் தயாராக உள்ளன. இந்நிலையில், திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாக பெற்றுவருவதைக் கண்டித்தும், அந்த நிறுவனங்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும் சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கும், பொருளாதார இழப்புக்கும் தீர்வு காணும் வகையிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வேலைநிறுத்தம் குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம், பெப்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக அமைப்பினர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.