குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை என பொறுப்புடன் கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழில் தெரிவித்துள்ளார். யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்தெரிவிக்கையில் ,
வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அதன் போது காணாமல் போனவர்கள் இந்த நாட்டில் ஒழித்து வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இராணுவ முகாம்களில் பொலிஸ் நிலையங்களில் அதேபோல காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள். ஜனாதிபதி எனும் வகையில் அது தொடர்பில் தெளிவாக தேடி பார்த்தேன்.
அவர்கள் சொன்னது போல காணாமல் போன எவரும் அவ்வாறு மறைத்து வைக்கப்படவில்லை என்பதனை கூறுகின்றேன். அந்த பெற்றோர்களுக்கு நிதி உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளேன். காணமல் போனார் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை. தெற்கிலும் சிங்கள முஸ்லீம் என பலர் காணாமல் போயுள்ளனர். எனவே அரசாங்கம் எனும் வகையில் என்னால் செய்ய கூடியதனை செய்வேன். எனக்கு ஒழிப்பதற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் பகிரங்கமாக எது என்றாலும் பேசுவேன்.என மேலும் தெரிவித்தார்.